Keelapavoor Narashimar Temple Tirunelveli

 கீழப்பாவூர்ஸ்ரீநரசிம்மர்  

                

பதினாறு கை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன.


நவக்கிரகங்கள், பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கி, கேட்பதைத் தரும்  கற்பக தருவாய் அருள்பாலிக்கிறார், கீழப்பாவூர் நரசிம்மர், ரிஷிகளுக்கு  காட்சி கொடுத்து, நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்ட புராண சிறப்புமிக்க தலம் இது. மூர்த்தி,  ஸ்தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புக்களை உடையது இவ்வாலயம்.



வடிவச் சிறப்பு: இராஜஸ்தான் மாநிலம், பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி ஆகிய தலங்களுக்கு அடுத்தபடியாக கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தலையில் கிரீடத்துடனும், வெண்கொற்றக்குடையுடனும் கம்பீரமாக காட்சி தரும்  நரசிம்மரை சூரியனும் , சந்திரனும் வெண்சாமரங்கள்  வீசி வணங்கிக் கொண்டிருக்கின்றனர். இரண்யனின் தந்தையும், பிரகலாதனின் தாத்தாவுமான காசியப்பர், பிரகலாதன், அவனுடைய தாய் ஆகியோர் நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனைய திருக்கரங்களில் ஆயுதங்களுடன் வீற்றிருக்கும் நரசிம்மர்,இரண்டு கரங்களால் சக்கரம், சங்கு தரிசனம் தந்து, வலது கரம் ஒன்றால்  நாரதரின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய அபூர்வ வடிவ சிறப்புடன் அருள்புரிந்து வரும் நரசிம்மரை மிக அருகில்  நின்று  வழிபடலாம்.



சிங்க கர்ஜனை: இவ்வாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாயராட்சை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டதாக இப்பகுதி மக்களிடம்  செவி வழிச் செய்தி  உலாவுகிறது.  நரசிம்மரின் உக்ரம் காரணமாக கர்ஜனை சத்தம் கேட்டதாகவும்.  பால் , இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத்தொடங்கிய பிறகே சிங்க கர்ஜனை சத்தம் நின்றதாக கூறப்படுகிறது. இவருடைய சன்னிதி முன்பாகவே  மாபெரும் தெப்பக்குளம்  ஏற்படுத்தப்பட்டு உக்ரத்தை தணித்துள்ளனர். இப்போது சாந்த சொரூபியாகிவிட்ட நரசிம்மர், கண்களை மூடி தியானித்தபடியே காட்சி தருகிறார்.



நரசிம்மர் தீர்த்தம்: ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஈசான்ய திக்கில் தான் தீர்த்தம் அமைந்திருக்கும்,  ஆனால், நரசிம்மர் சன்னிதி முன்பாகவே தீர்த்தம் அமைந்திருப்பது  வேறெங்கும் காணமுடியாத சிறப்பு. ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திரப்படி இந்த தீர்த்தம் நர்மதை ஆகவும் தேவப்ராசிபடி கங்கை ஆக விளங்குவதும் இந்த நரசிம்மர் தீர்த்தத்தின் சிறப்பு ஆகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி, திருவோணம், வளர்பிறை சதுர்தசி நாள்களில் ஆலயத்தோடு  சேர்த்து தீர்த்தம் வலம் வருதல் உற்சவமும் இங்கே நடக்கிறது. 


சுவாதி பூஜை: ஒவ்வொரு மாதமும் நரசிம்மருடைய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் பால், இளநீர் மற்றும் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம்  நடக்கிறது.  சுவாதி நட்சத்திரந்தோறும் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் ருண விமோசனம் எனப்படும் கடன் தொல்லை நீங்கி, செல்வம் பெருகும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். மேலும் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் பில்லி, சூனியம், ஏவல்,  எதிரிகள் தொல்லையிருந்தும் விடுபடலாம்.


பரிகாரத்தலம்: கல்யாணத்தடை,  கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கு  இங்கு பரிகாரம் செய்து பலன் பெறலாம். சுவாதிநட்சத்திரக்காரர்களுக்கான தலம் இது.


நீராஞ்சனம்: ஆலயத்தின் நீராஞ்சனம் என்னும் நெய்தீபம் ஏற்றி, 16 சுற்றுக்கள் பிரதட்சிணமாக வலம் வந்து நரசிம்மரை வழிபடுவர்களுக்கு, வேண்டுதல்கள் விரைந்து நிறைவேறுகிறது. நரசிம்மருக்கு  மிகவும் விருப்பமான வெல்லத்தினால் ஆன பானகம் அமுது செய்வித்தும் வழிபடலாம்.

Previous
Next Post »