சித்தர் - நயனப்பசாமி-அச்சன்புதூர்

 

நயனப்பசாமி

🙏 அச்சன்புதூர் 🙏


எத்தனையோ மகான்கள் பல்வேறு தெய்வங்களின் உபாசகர்களாக இருந்துள்ளனர். ஆனால் நயனப்ப சுவாமிகளோ மூத்தாள் (மூதேவி) உபாசகராக இருந்தார்கள். ஸ்வாமிகள் தென்காசிக்கு அருகிலுள்ள       சுரண்டையைப் பூர்வீகமாக கொண்டவர் என்றும் சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.


சுவாமிகள் லங்கோடு அணிந்திருப்பார்கள். கையில் ஒரு சிரட்டை (தேங்காய் ஓடு) இருக்கும். கழுதைகள் உள்ள இடத்திலும் (கழுதை மூதேவியின் வாகனம்) கொல்லன்  உலைப்பட்டறை புழுதியிலும் படுத்திருப்பார்கள். தேவைப்படும் பொழுது லங்கோடு மடிப்பிலிருந்து பணம் எடுத்துக் கொடுப்பார்கள். சுவாமிகள் சில நேரம் உடம்பினை தனித்தனியாக பிரித்துக் காட்டும் நவகண்ட யோகத்தில் இருப்பதை பார்த்த பின்னர்தான் சுவாமிகள் பெரிய சித்தர் என்பதை அச்சன்புதூர் பகுதி மக்கள் உணர்ந்தனர்.குழந்தைகளுக்குச் சுவாமிகள் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பாராம். அந்தக் காலத்து காலணா செப்புக்காசைப் பாதிப் பகுதியை வாயில் வைத்து எச்சில் பண்ணி, வெளியே எடுப்பாராம், எச்சில்பட்ட பகுதி தங்கமாக மாறியிருக்குமாம். 


சுவாமிகளின் மறைவைப் பற்றிய செய்திகள் தெரியவில்லை. அச்சன்புதூரில் அக்காலத்தில் கெங்கமுத்துத் தேவர் எனும் அருளாளர் வாழ்ந்தார். அப்பகுதிக்கு வரும் சாதுக்களை பராமரிப்பதற்காக ஒரு மடம் கட்டி உணவு முதலியன நல்கி வந்தார். அவரது துணைவியாரே திருமலை முருகன் கோயிலைக் கட்டிய சிவகாமிப் பரதேசி அம்மையார். நயனப்பசாமி பரிபூரணமான உடன் கெங்கமுத்துத்தேவரே தமது மடத்தை ஒட்டி வடபுறம் சமாதி கோயில் ஏற்படுத்தினார். இன்றும் அப்பகுதியில் சமாதி கோயில் சுவாமிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், சில நேரங்களில் சமாதி பகுதியில் சிலரது கண்களுக்கு சுவாமிகள் தென்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


சமாதிக்கோயில்  உள்ள இடம்


தென்காசிக்கு அருகில் வடமேற்கில் உள்ள சிற்றூர் அச்சன்புதூர். அங்கு வடக்கு அம்மன் கோவில் தெருவின் வடகோடியில் உள்ளது கெங்கமுத்துத்தேவர் மடம். அம்மடத்தை அடுத்து வடபுறம் உள்ளது நயனப்பசாமி சமாதிக்கோயில். பூஜை வழிபாடு இன்றி சுற்றிலும் கால் வைக்க முடியாதபடி அசுத்தமாக இருக்கிறது. கிழக்கு பார்த்த சன்னதி சிவலிங்க பிரதிஷ்டை.

Previous
Next Post »