கொல்லத்தம்மை என்கிற ஸ்ரீ பிரம்மானந்த சர்வ சாட்சி அம்மா

 


Siddhar history PDF file Here

கொல்லத்தம்மை என்கிற ஸ்ரீ பிரம்மானந்த சர்வ சாட்சி அம்மா

🙏 பத்மநாபபுரம் 🙏


அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞான சுடரேற்றி எல்லோர் உள்ளங்களிலும் ஆன்மீக ஒளி பரப்பி   அவ்வாத்மாக்களை கடைத்தேற செய்வதற்காக அவதரித்த மகான்களில் ஒருவரே  கொல்லத் தம்மை என்கிற ஸ்ரீ பிரம்மானந்த சர்வ சாட்சி அம்மா அவர்கள். அம்மா அவர்கள் கிபி 1862 ஆம் வருடம் கொல்லத்தில் உள்ள இரவிபுரத்தின் அருகிலுள்ள வானத்துங்கள் என்னுமிடத்தில் ஐயப்பன் பிள்ளை மற்றும் பார்வதி அம்மை என்னும் பெற்றோருக்கு அருந்தவப் புதல்வியாய் அவதரித்தார்கள். அம்மாவின் பிள்ளை திருநாமம் நானியம்மை என்பதாகும். பள்ளிக்குச் செல்லவில்லை ஆனாலும் வீட்டிலிருந்தே படித்தே சமஸ்கிருதம், மலையாளம், கணிதம், வேதாந்தம் இவற்றில் புலமை பெற்றார்.


நானியம்மயாருக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பம் சிறிதுமில்லை. அவரது தந்தையார் இதை அறிந்திருந்தும் அம்மையாரை கட்டாயப்படுத்தி ஐயப்பன் பிள்ளை என்பாருக்கு மணமுடித்து வைத்தார். இல்லறப் பயனாய் ஒரு குழந்தை பிறந்து இளமையிலேயே இறந்தது. குழந்தை இறந்த சில நாட்களில் கணவரும் இறந்தார். மணமாகி இரண்டே ஆண்டுகளில் மணவாழ்வு இல்லாமல் போனதால், யாவற்றையும் துறந்து தீவிர ஆன்ம சாதனையை மேற்கொண்டார்.

ஒரு நாள் , தியானத்தில் இருக்கும்போது ஒரு காட்சி தென்பட்டது. அக்காட்சி உணர்த்திய படி வீட்டில் இருந்த ஓர் உறவினரை துணைக்கு அழைத்துக் கொண்டு கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள மருந்துவாழ் மலைக்குச் சென்றார். அடிவாரத்தை அடைந்தவுடன் தெய்வீகமான யோகி ஒருவர் நானி அம்மையை வரவேற்று, மலைமீது அழைத்துச்சென்று ஆத்ம உபதேசம் கொடுத்தார். அம்மாவுக்கு உபதேசம் அளித்த குருநாதர் ஹரித்துவாரில் இருந்து வந்தவர். அதன் பிறகு பின்னாளில் குருநாதரை கண்டு வணங்குவதற்காக அம்மா மூன்று முறை ஹரித்வார் சென்று வந்தார்கள். உபதேசம் பெற்ற பின் சிலகாலம் மருந்துவாழ் மலையில் தவம் செய்து வந்தார்கள். பிரம்ம ஞானத்தில் அம்மாவின் நிலையை அடைவதற்கு எவரும் அக்காலத்தில் இல்லை என்பது சட்டம்பி சுவாமிகளின் கருத்து. சட்டம்பி சுவாமியையும், ஸ்ரீ நாராயண குரு வையும் தைக்காடு அய்யா சுவாமிகள் மருந்துவாழ் மலைக்கு அனுப்பியபோது அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது நானியம்மையேயாகும்.

தைக்காடு அய்யா சுவாமிகள் தமது சமாதிநிலை நெருங்குவதை அறிந்து, நானியம்மை தம் வீட்டிற்கு வர எண்ணினார்கள்.   அக்குறிப்பினை உணர்ந்த அம்மா அவர்கள் கொல்லத்தில் இருந்து படகு மூலம் திருவனந்தபுரம் வந்தார்கள். அங்கு குதிரை வண்டி ஒன்றை அமர்த்தி, தைக்காடு அய்யாசுவாமி வீட்டிற்கு போக வேண்டும் என்றார்கள். வண்டி ஓட்டிக்கு சுவாமிகளை தெரியவில்லை. வீடு தெரியாது என்றான். அம்மாவை வண்டியில் அமர்ந்து வண்டி காரனிடம் நீ வண்டியை தைக்காடு ஓட்டு குதிரை எங்கு நிற்கிறதோ நான் இறங்கிக் கொள்கிறேன் என்றார். குதிரை சரியாக அய்யா சுவாமிகளின் வீட்டின் முன் நின்றது.

அய்யா சுவாமிகள் நானி அம்மையிடம் தம் சிஷ்யை குஞ்சம்மாவை  ஒப்படைத்தார். சுவாமிகளின் சமாதி வைபவம் முடிந்ததும் குஞ்சம்மயை அழைத்துச் சென்ற நானியம்மை தவம் செய்ய சொன்னார். ஏழு ஆண்டுகள் தவம் செய்து "சுயம்பிரகாச யோகினி அம்மா" என்னும் சன்னியாச பெயர் பெற்றார். இவரே பின்னாளில் குளத்தூரில் ஸ்ரீ சுயம்பிரகாச ஆசிரமத்தை தோற்றுவித்தார். ஒருநாள் நாணியம்மை ஆசிரமத்தில் உணவு வேளையின் போது எதிர்பாராமல் சில சாதுக்கள் வந்துவிட்டனர். இருக்கும் உணவு அனைவருக்கும் காணாதே என சுயம்பிரகாச யோகினி அம்மா தயங்கினார். சிஷ்யையின் தயக்கத்தை உணர்ந்த நானியம்மா ஒரு ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு சமையலறையில் இருந்த உணவுப்பண்டங்களை ஒரு கிளறு கிளறி விட்டு இப்போது பரிமாறு என்றார்கள்.

என்ன அதிசயம்? 

எல்லோரும் உண்ட பின்பும் உணவுகள் மீதம் இருந்தன.

ஓர் ஆன்மீக பந்தயத்தில் அம்மா சொன்னதே சரியாக இருந்தது. அப்போது மருந்துவாழ் மலையில் இருந்த மூன்றடி உயரம் இருந்து ஒரு யோகி அம்மாவைப்பற்றி "ஸர்வ ஸாஷி - ஸர்வ ஸுட்சமம்" என்று கூறினார்.அன்றிலிருந்தே அம்மாவிற்கு சர்வ சாட்சியம்மா என்னும் பெயர் நிலை பெற்றது. மண்டைக்காடு பகவதி கோயிலில் அம்மா அவர்கள் ஸ்ரீசக்கர பூஜை நடத்தினார்கள். அதன் பிறகு அக்கோயிலின் சைதன்யம் மிகவும் வளர்ந்தது.

எதிர்காலத்தில் நிகழப்போவதை துல்லியமாக கணிப்பதில் அம்மா வல்லவராய் இருந்தார். ஆன்மீகத்தின் அனைத்து நிலைகளிலும் சித்தி பெற்றிருந்த அம்மா தமது சமாதி காலம் நெருங்குவதை உணர்ந்தார்கள்.தமது சிஷ்யை சுயம்பிரகாச யோகினி அம்மாவை அழைத்து சீடர்களை வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது என்றார்கள்.அம்மா தனது இறுதி காலங்களில் பத்மநாபபுரதிலேயே இருந்தார்கள்.அம்மாவின் கட்டளைப்படி சமாதிக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன.அம்மா குறிப்பிட்ட நாள் நேரத்தில் கிபி 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்கழி மாதத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பரிபூரணம் ஆனார்கள்.


கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை சந்திப்புக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பத்மநாபபுரம் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை சந்திக்கும் இடத்தில் இருந்து  வடக்குத் தெருவில் சுயம்பிரகாச ஆசிரமம் உள்ளது.ஆசிரமத்தில் நுழைந்ததும் இடது தென்புறத்தில் அம்மாவின் சமாதி பீடம் உள்ளது.கருவறையில் சிறிய மேடையில் திருவடி பிரதிட்டை. கிழக்கு பார்த்த சன்னதி

Previous
Next Post »